மொனராகலை மாவட்டத்தின் பெருங்காட்டுப் பகுதியில் அமைந்துள்ள, புனித கபில்வத்தை முருகன் ஆலயத்தின் வருடாந்த யாத்திரை, கடந்த 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை பக்தி பரவசத்துடன் ஆரம்பமாகி, 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு சிறப்பாக நிறைவுற்றது.

குமுக்கன் ஆற்றங்கரையருகில் இயற்கை வளமுடன் அமைந்துள்ள இந்தத் தலம், ‘கற்பக விருட்சம்’ என பக்தர்கள் போற்றும் புனித புளியமரத்திற்காகவும் பிரசித்தி பெற்றது. இத்தலம் முருகப்பெருமான் தவம் செய்த இடமாகவும், ரிஷிகள் மற்றும் முனிவர்கள் தங்கிய புனித நிலமாகவும், இதிகாச–புராண வரலாறுகளுடன் தொடர்புடையதாகவும் பக்தர்கள் நம்புகின்றனர்.

இவ்வாண்டு யாத்திரை , சித்தர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றது. உலக நன்மை வேண்டி யாகங்கள், சித்த யாகம், நாத ஒலி வழிபாடு, சத்ரு சங்கார யாகம், வேல் பூஜை மற்றும் கபில வன பூஜை உள்ளிட்ட ஆன்மீக நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்த யாத்திரையில் கலந்து கொண்ட பக்தர்கள் 21 நாட்கள் விரதமிருந்து ஆன்மீக பயணத்தில் ஈடுபட்டனர். மேலும், தமிழ் மற்றும் சிங்கள மக்களின் ஒருங்கிணைந்த பங்கேற்பு இவ்விழாவை இன ஒற்றுமையின் சிறந்த எடுத்துக்காட்டாக மாற்றியது.
நாட்டின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வருகை தந்து வழிபாடுகளில் ஈடுபட்டனர். இப்புனித யாத்திரை பக்தி, சமாதானம் மற்றும் இன நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் முக்கிய ஆன்மீக நிகழ்வாக திகழ்கிறது.

















