பிரித்தானியப் பிரதமரின் முன்னாள் தலைமை அதிகாரி (Morgan McSweeney) மோர்கன் மெக்ஸ்வீனியிடம், லார்ட் மண்டெல்சனின் பாதுகாப்பு சோதனை (Security Vetting) தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்க நாடாளுமன்றக் குழு தீர்மானித்துள்ளது.
அமெரிக்காவிற்கான பிரித்தானியத் தூதராக லார்ட் மண்டெல்சன் நியமிக்கப்பட்ட போது, அவரது பாதுகாப்பு சோதனைகளை விரைவுபடுத்துமாறு சிவில் சேவை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டதா என்பது குறித்து விசாரிக்க, பிரதமரின் முன்னாள் தலைமை அதிகாரி மோர்கன் மெக்ஸ்வீனியை (Morgan McSweeney) நாடாளுமன்றக் குழு அழைத்துள்ளது.
லார்ட் மண்டெல்சனை தூதராக நியமிக்கப் பிரதமருக்கு ஆலோசனை வழங்கியவர் இந்த மெக்ஸ்வீனி ஆவார்.
இருப்பினும், பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டினுடனான லார்ட் மண்டெல்சனின் கடந்தகால நட்பு காரணமாக, அவர் பதவியேற்ற ஏழு மாதங்களிலேயே நீக்கப்பட்டார்.
இந்தத் தவறான நியமனத்திற்குப் பொறுப்பேற்று மெக்ஸ்வீனியும் பெப்ரவரி மாதம் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் லார்ட் மண்டெல்சனின் பாதுகாப்புச் சோதனைகளை (Vetting) விரைவாக முடிக்குமாறு பிரதமர் அலுவலகம் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாக மூத்த சிவில் சேவை அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.
பாதுகாப்புச் சோதனைக் குழுவினர் (UKSV) மண்டெல்சன் தொடர்பாகக் கவலைகளை வெளியிட்ட போதிலும், வெளிவிவகார அமைச்சு அவருக்குப் பாதுகாப்பு அனுமதியை வழங்கியதாகத் தெரியவந்துள்ளது.
அடுத்த வாரம் நடைபெறவுள்ள வெளிவிவகாரக் குழுவின் விசாரணையில் பிரதமரின் முன்னாள் தலைமை அதிகாரி, அமைச்சரவை அலுவலகத்தின் மிக மூத்த அதிகாரி, வெளிவிவகார அமைச்சின் பாதுகாப்பு அதிகாரி ஆகியோர் சாட்சியமளிக்க உள்ளனர்.
இந்தத் தூதுவர் நியமன விவகாரத்தில் பிரதமருக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகள் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளில் நிகழ்ந்த குறைபாடுகள் குறித்து இந்த விசாரணையின் மூலம் முக்கிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

















