அரசாங்கத்தால் ஒதுக்கப்படும் நிதியை உரிய காலப்பகுதிக்குள் திட்டங்களாக மாற்றி மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அதிகாரிகள் காட்டும் அசண்டையீனம், அரசாங்கம் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்துவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபையின் வர்த்தக வாணிப அமைச்சின் 2026ஆம் ஆண்டுக்கான வருடாந்த அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம், ஆளுநர் தலைமையில் நேற்றைய தினம் (28) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
அதன் ஆரம்பத்தில் ஆளுநர் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
‘அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியும், அதனை நடைமுறைப்படுத்துவதில் அதிகாரிகள் காட்டும் தாமதம் அல்லது அலட்சியம் காரணமாக மக்கள் மத்தியில் அரசாங்கம் எதனையும் செய்யவில்லை என்ற தவறான தோற்றப்பாடு உருவாக்கப்படுகின்றது.
எமது மாகாண நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகள் இவ்வாறான நிலை ஏற்படாமல் பணியாற்றுவதை உறுதி செய்ய வேண்டும்.
சமூக சேவைகள் திணைக்களத்தின் ஊடாக இவ்வாண்டில் 226 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் 33 திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன.
வட மாகாணத்தில் உள்ள மாற்றுவலுவுடையோர் தொடர்பான முழுமையான ‘முதன்மைப் பட்டியலை’ திணைக்களம் வசம் வைத்திருப்பதை உறுதிப்படுத்துமாறும், அவர்களின் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் பூர்த்தி செய்ய வேண்டும் என ஆளுநர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து, மகளிர் விவகார அமைச்சின் கீழ் வாழ்வாதார உதவி வழங்கல் தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டன.
தொழிற்துறை திணைக்களத்துக்கு 151 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் திட்டங்களின் கீழ் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்ட வேலைகளின் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
அதன் போது, சில திட்டங்கள் தொடர்பில் ஆளுநர் மீள் பரிசீலனை மேற்கொள்ளுமாறும் பணிப்புரை விடுத்தார்.
இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், அமைச்சின் செயலாளர், பிரதிப் பிரதம செயலாளர்கள், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், தொழிற்துறை திணைக்களப் பணிப்பாளர், சமூகசேவைகள் திணைக்கள உதவிப் பணிப்பாளர், கூட்டுறவு ஊழியர் ஆணைக்குழுவின் செயலாளர், ஒவ்வொரு மாவட்டங்களினதும் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.













