பிரித்தானிய அரசாங்க உயர் அதிகாரி ஒருவரின் பதவி நீக்கத்தைத் தொடர்ந்து சிவில் சேவை ஊழியர்களிடையே ஏற்பட்டுள்ள அதிருப்தியைத் தணிக்கும் வகையில், பிரதமர் கீர் ஸ்டார்மர் அவர்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அமெரிக்காவுக்கான பிரித்தானிய தூதுவராக லார்ட் மண்டெல்சன் (Lord Mandelson) நியமிக்கப்பட்ட விவகாரத்தில், பாதுகாப்பு ஆய்வுகளை (Vetting) முறையாகக் கையாளவில்லை என்ற குற்றச்சாட்டில் வெளிவிவகார அமைச்சின் முன்னாள் தலைவர் ஒலி ராபின்ஸ் (Sir Olly Robbins) கடந்த மாதம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
பாதுகாப்பு அதிகாரிகள் சில கவலைகளை வெளியிட்ட போதிலும், மண்டெல்சனுக்குப் பாதுகாப்பு அனுமதியை வழங்கிய விபரத்தைப் பிரதமர் ஸ்டார்மரிடம் தெரிவிக்க ஒலி தவறியதாகக் கூறப்பட்டது.
இந்தச் சம்பவத்தால் சிவில் சேவை ஊழியர்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்க, நேற்றையதினம் (06) பிரதமர் விசேட கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
அதில் கடந்த சில வாரங்களாக நிலவும் சூழல் ஊழியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருப்பதை தான் உணர்வதாகவும் ஆனால், இந்த ஒரு சம்பவம் ஒட்டுமொத்த சிவில் சேவையையும் தீர்மானிக்காது எனவும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசின் இந்த விளக்கத்தை தொழிற்சங்கங்கள் கடுமையாக விமர்சித்துள்ளன.














