பிரித்தானியாவின் எரிசக்தி ஜாம்பவானான ‘ஷெல்’ (Shell) நிறுவனம், இந்த ஆண்டின் முதல் காலாண்டில் தனது நிகர லாபத்தில் 19 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன.
இதன் எதிரொலியாக, பிரித்தானியாவின் முன்னணி எரிசக்தி நிறுவனமான ‘ஷெல்’ தனது காலாண்டு லாபத்தில் பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது.
நடப்பு 2026-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி – மார்ச்), வரிக்குப் பிந்தைய நிகர லாபம் 5.69 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
கடந்த 2025-ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் ஈட்டப்பட்ட லாபம் 4.78 பில்லியன் டொலர்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச எரிசக்தி சந்தையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள சீர்குலைவுகளுக்கு மத்தியிலும், இந்த வலுவான முடிவுகளை எட்ட முடிந்துள்ளதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி வேல் சவான் (Wael Sawan) தெரிவித்துள்ளார்.
எமது செயல்பாட்டுத் திறனில் காட்டிய தீவிரமான கவனம் காரணமாகவே இந்த உயர்வு சாத்தியமானது என அவர் மேலும் குறிப்பிட்டார்.
உலகச் சந்தையில் நிலவும் நிலையற்ற தன்மை மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் காரணமாக எரிசக்தி நிறுவனங்களின் லாபம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஷெல் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.














