பொலிஸ் பரிசோதகர் பாலேந்திரசிங்க சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, மூன்று ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் பரிசோதகர் பாலேந்திரசிங்கவைச் சுட்டுக் கொன்ற சம்பவத்தில், துப்பாக்கிதாரி பயணித்த மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபர் பொலிஸ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது பொலிஸ் காவலில் உள்ள ‘எஸ்.எஃப். ராஜு’ (பிரபல குற்றவாளி ‘கரந்தெனிய சுத்தா’வின் சகோதரர்) என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படி, கரந்தெனிய சுத்தாவினால் திட்டமிடப்பட்ட தொடர் கொலைகள் குறித்த ரகசியத் தகவல்கள் பொலிஸ் அதிகாரி பாலேந்திரசிங்கவிடம் இருந்த காரணத்தினாலேயே அவர் குறிவைத்து கொல்லப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர், சம்பவத்தின் பின்னர் கரந்தெனிய சுத்தாவினால் துபாய்க்கு வரவழைக்கப்பட்டுள்ளார்.
கடும் போதைப்பொருள் பழக்கத்திற்கு அடிமையான அவர், துபாயில் போதைப்பொருள் கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டதாக சந்தேகநபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
இந்தத் தகவலின் உண்மைத்தன்மை குறித்து பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட ராஜு வழங்கிய தகவலின்படி, மீட்டியாகொட பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கரந்தெனிய சுத்தாவிற்குச் சொந்தமான டி-56 ரக துப்பாக்கி, மெகசின் மற்றும் 15 தோட்டாக்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதன் மூலம், குறித்த கும்பலுக்குச் சொந்தமானதாகக் கருதப்படும் 8 டி-56 துப்பாக்கிகளில் 6 துப்பாக்கிகள் இதுவரை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மல் கொடிதுவக்குவின் நேரடி மேற்பார்வையில், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரிவங்ச உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் இந்தச் சம்பவம் தொடர்பாகத் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.













