புத்த ரஷ்மி வெசாக் வலயத்தின் ஏற்பாட்டுப் பணிகள் மற்றும் வெசாக் வலயம் நடைபெறும் காலப்பகுதியில் மின்சக்தி பயன்பாடு ஆகியன குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதுடன் புத்த ரஷ்மி வெசாக் வலயம் தொடர்பான இறுதி கலந்துரையாடல் நேற்று (20) அலரிமாளிகையில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி தலைமையில் நடைபெற்ற போதே இது குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இதற்கமைய, வெசாக் பண்டிகையை முன்னிட்டு எரிபொருள் மற்றும் மின்சாரத்தைப் பயன்படுத்துவதற்காக அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருந்த விதிமுறைகளைத் தளர்த்துவது குறித்து இதன்போது தெளிவுபடுத்தப்பட்டதுடன், வெசாக் வலயப் பணிகளை வெற்றிகரமாக ஏற்பாடு செய்வதற்கும் ஒருங்கிணைப்பதற்கும் நியமிக்கப்பட்ட குழுக்களின் அதிகாரிகளின் விபரங்களைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக, கடந்த வருடங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறைந்தபட்ச எரிபொருள் மற்றும் மின்சாரச் செலவுடன், கொள்கை வழிபாட்டிற்கு முதலிடம் வழங்கி, பக்தர்களின் மனங்களை மகிழ்விக்கும் வகையில் வெசாக் வலயத்தை அலங்கரிப்பதற்குப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இம்முறை வெசாக் வலயம் இரவு 7.00 மணி முதல் நள்ளிரவு 12.30 மணி வரை நடத்தப்படவுள்ளதாகவும் கொழும்பு கங்காராம விகாரையின் விகாராதிபதி கலாநிதி வணக்கத்திற்குரிய கிரிந்தே அஸ்ஸஜி தேரர் தெரிவித்தார்.














