வடக்கு அயர்லாந்து கலவரங்களின் போது நடந்த பல கொலைகளில் எம்ஐ5 (MI5) இன் பங்கு இருந்தபோதிலும், படைவீரர்களுக்கும் துணை இராணுவப் படையினருக்கும் பொது மன்னிப்பு வழங்கிய சர்ச்சைக்குரிய மரபுச் சட்டத்தை உருவாக்குவதில் பிரிட்டிஷ் பாதுகாப்பு சேவைகள் ஈடுபட்டிருந்தன என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இந்தச் சட்டத்தை உருவாக்குவதில் ஈடுபட்டிருந்த இரகசியக் கொள்கை வகுக்கும் குழுவில், காவல்துறை மற்றும் அரசு நிறுவனங்களைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் இடம்பெற்றிருப்பது பெல்ஃபாஸ்டைத் (Belfast) தளமாகக் கொண்ட ‘தி டீடெயில்’ என்ற செய்தி இதழ் நடத்திய விசாரணையின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக ‘தி கார்டியன்’ பத்திரிகை தெரிவித்துள்ளது.
பாதுகாப்புப் படைகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் உட்பட, பழைய வழக்குகளில் திறமையான மற்றும் சுதந்திரமான விசாரணைகளை உறுதிசெய்ய வேண்டிய சட்டப்பூர்வ கடமைகள் உள்ளன.
இருந்தபோதிலும், கொள்கையை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கப் பணிக்கப்பட்ட குழுவிலேயே காவல்துறை மற்றும் பாதுகாப்புப் பிரமுகர்கள் பெருமளவில் ஈடுபட்டுள்ளனர் என்பதும் அந்த விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்தச் சட்டத்தை உருவாக்குவதில் பாதுகாப்பு சேவைகள் ஈடுபட்டிருந்தன என்ற வெளிப்பாடுகள், மரபுச் சட்டத்திற்கும், வழக்குகளை விசாரிக்க அது அமைத்த அமைப்பான சுதந்திர நல்லிணக்க ஆணையத்திற்கும் பின்னணியில் பாதுகாப்பு மற்றும் காவல் சேவைகளே இருந்தன என்ற நீண்டகால பொது மக்களின் கவலைகளுக்கு வலு சேர்க்கின்றன.
இந்த நிலையில், இந்த கண்டுபிடிப்பானது ஏற்கெனவே இந்தச் சட்டத்தை விமர்சித்து வரும் பாதிக்கப்பட்டோர் குழுக்களிடையே மேலும் ஆத்திரத்தை மூட்டியுள்ளது.
மரபு சார்ந்த பிரச்சினைகளைக் கையாள்வதற்கான முந்தைய முயற்சியான வரலாற்று விசாரணைக் குழு, அரசால் நிகழ்த்தப்பட்ட கொலைகளை முறையாக விசாரிக்கத் தவறியது கண்டறியப்பட்ட பின்னர் 2014 ஆம் ஆண்டில் கலைக்கப்பட்டும் இருந்தமை குறிப்பிடத்தக்கது.















