இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பை மையமாகக் கொண்டு நடத்தப்படவுள்ள பொசன் வலயம் தொடர்பான கலந்துரையாடலொன்று ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் தேசிய சாரணர் பொசன் வலயக் குழுவின் பிரதிநிதிகளுக்கு இடையில் இன்று (08) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
இம்முறை பொசன் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 28 மற்றும் 29 ஆகிய இரு தினங்களில் கொழும்பை மையமாகக் கொண்டு முதன்முறையாக நடத்தப்படவுள்ள தேசிய சாரணர் பொசன் வலயத்தை மிக விமர்சையாக நடத்துவது குறித்தும், அதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதி அலுவலகத்தின் தலையீட்டுடன், முப்படையினர் , பொலிஸார் உள்ளிட்ட அரச துறையினரினதும் தனியார் துறையினரினதும் பங்களிப்புடன் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து சாரண உறுப்பினர்களின் பங்கேற்புடன் இந்த பொசன் வலயம் நடத்தப்படவுள்ளது.
லேக்ஹவுஸ் சுற்றுவட்டம் முதல் பொலிஸ் தலைமையக சந்தி வரையிலான பகுதியை மையமாகக் கொண்டு நடத்தப்படும் இப்பொசன் வலயத்தில், தோரணங்கள், விளக்குக் கூடுகள், மிகிந்தலை மாதிரிகள், பக்திப் பாடல்கள், தன்சல்கள் உள்ளிட்ட ஆன்மீக எழுச்சியையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் பல நிகழ்ச்சிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே, பிரதம சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.













