இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரான்ஸ் சென்றுள்ளார்.
அங்கு அவர் உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்க உள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவரைச் சந்திக்கும் முதல் சில உலகத் தலைவர்களில் ஒருவராக மோடி 2025 பெப்ரவரியில் வொஷிங்டனுக்குப் பயணம் மேற்கொண்டார்.
அதன்பிறகு, மோடிக்கும் ட்ரம்பிற்கும் இடையிலான முதல் சந்திப்பு இதுவாகும்.
குறிப்பாக, வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நடந்த சண்டையில் இந்திய மாலுமிகள் துப்பாக்கிச் சூட்டில் சிக்கியதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியிலும் இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.
கடந்த வாரம் வளைகுடாப் பகுதியில் இந்திய மாலுமிகளுக்கு மிகவும் கடினமான வாரமாக அமைந்தது.
ஓமன் கடற்கரைக்கு அப்பால், பலாவ் நாட்டுக் கொடியை ஏந்திய எம்.டி. செட்டபெல்லோ என்ற கப்பல் அமெரிக்க படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு உள்ளானது.
இதன் விளைவாக, குறைந்தது மூன்று இந்தியர்கள் உயிரிழந்தனர்.
எம்டி மரிவெக்ஸ் மற்றும் எம்டி ஜல்வீர் ஆகிய மேலும் இரண்டு கப்பல்களும் கடந்த வாரம் அமெரிக்க கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகியமையும் குறிப்பிடத்தக்கது.
















