இலங்கை இராணுவத்தின் பாதுகாப்பு மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக இந்திய அரசாங்கத்தினால் நன்கொடையாக வழங்கப்பட்ட நவீன இராணுவ உபகரணங்கள் மற்றும் அவசர விபத்துச் சிகிச்சைக்கான மருத்துவத் தொகுதி என்பன உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டுள்ளன.
ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டையிலுள்ள பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் இன்று ( 16) நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்த உபகரணங்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொன்தாவிடம் (ஓய்வு) உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவும் கலந்துகொண்டார்.
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இந்த இராணுவத் தளபாடங்களின் ஒட்டுமொத்த மதிப்பு 5 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹைட்டி நாட்டில் ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையில் கடமையாற்றும் இலங்கை இராணுவப் பிரிவினருக்காக, இந்தியப் படைகளால் வழங்கப்பட்ட விசேட உபகரணங்களும் இதனுள் அடங்கும்.
இவ்வுபகரணங்கள் அனைத்தும் கடந்த ஜூன் 10 முதல் 13 ஆம் திகதி வரை கொழும்புத் துறைமுகத்திற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்த இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “INS Sharda” போர்க்கப்பல் மூலம் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டிருந்தன.
இந்நிகழ்வில் உரையாற்றிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, “இந்திய இராணுவத்தின் தற்போதைய கையிருப்பில் இருந்தே இவ்வுபகரணங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன. இது இரு நாட்டுப் படைகளுக்கும் இடையிலான உடைக்க முடியாத பலமான பந்தத்திற்குச் சான்றாகும்” எனக் குறிப்பிட்டார்.
மேலும், இருதரப்புப் பாதுகாப்பு உறவானது வெறும் கூட்டுப் பயிற்சிகள் மற்றும் மனிதாபிமான உதவிகளுடன் நின்றுவிடாமல், தற்போது உட்கட்டமைப்பு மேம்பாடு, தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் இராணுவத் தளபாடங்களை வழங்குதல் எனப் பரந்த அளவில் விரிவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வரலாற்றுச் சிறப்புமிக்க பாதுகாப்பு உபகரணங்கள் கையளிப்பு நிகழ்வில், இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் ஆனந்த் முகுந்தன், லெப்டினன்ட் கேர்ணல் மந்தீப் சிங் மற்றும் இலங்கை பாதுகாப்பு அமைச்சு, இராணுவ உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.














