பாரம்பரிய யூனியனிஸ்ட் குரல் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜிம் அலிஸ்டர் (Jim Allister), குடியேற்றவாசிகள் குறித்துத் தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட கேலி சித்திரம் ஒன்று “இனவெறித் தூண்டல்” எனப் பலத்த விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது.
அயர்லாந்து குடியரசின் டப்ளினில் இருந்து வட அயர்லாந்துக்குக் குடியேற்றவாசிகள் பேருந்து மூலம் எல்லையைக் கடந்து வருவதைச் சித்தரிக்கும் வகையில் அந்த கேலி சித்திரம் வரையப்பட்டிருந்தது.
இப்படத்திற்கு வட அயர்லாந்தின் முன்னணி அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதேவேளை, தன் மீதான இந்த கடுமையான விமர்சனங்களை மறுத்துள்ள டி.யு.வி தலைவர் ஜிம் அலிஸ்டர், பிரித்தானியா மற்றும் அயர்லாந்துக்கு இடையே நடைமுறையிலுள்ள ‘பொதுப் பயணப் பகுதி’ ஒப்பந்த விதிமுறைகள் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பொதுமக்களுக்குப் வெளிச்சமிட்டுக் காட்டுவதற்காகவே தான் இந்த கேலி சித்திரத்தை பகிர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
இருப்பினும், எல்லையோரக் குடியேற்றவாசிகள் பிரச்சினை வட அயர்லாந்தில் ஏற்கனவே அரசியல் ரீதியாகப் பெரும் விவாதப் பொருளாக உள்ள நிலையில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினரே இத்தகைய கார்ட்டூனைப் பகிர்ந்துள்ளமை அங்கு மேலும் அரசியல் பதற்றத்தை அதிகரித்துள்ளது.



















