நாட்டில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகமாகக் காணப்படும் 06 மாகாணங்களை மையப்படுத்தி, இன்று (24) முதல் வரும் 26ஆம் திகதி வரை மூன்று நாட்களுக்குத் தொடர்ச்சியாக விசேட டெங்கு ஒழிப்புத் திட்டமொன்று செயற்படுத்தப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.
அண்மைக்காலமாகப் பெய்து வரும் மழையுடனான காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், இந்த அவசரத் தடுப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணம் உட்பட டெங்கு பரவும் அதிதீவிர அபாய வலயங்களாகக் கண்டறியப்பட்டுள்ள நாட்டின் முக்கிய 06 மாகாணங்களில் இத்திட்டம் ஒரே நேரத்தில் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
சுகாதார அதிகாரிகள், பொது சுகாதாரப் பரிசோதகர்கள் (PHI) மற்றும் பாதுகாப்புப் படையினர் அடங்கிய விசேட குழுக்கள் இந்த மூன்று நாட்களும் வீடு வீடாகவும், பொது இடங்களுக்கும் சென்று தீவிரக் களப் பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
பொதுமக்கள் தங்களின் வீடுகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வளாகங்களைச் சுத்தமாக வைத்திருப்பதுடன், நீர் தேங்கி நிற்கும் இடங்களை உடனடியாக அகற்ற வேண்டும் எனச் சுகாதாரத் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தச் சோதனைகளின் போது பாடசாலைகள், மதஸ்தலங்கள், கட்டுமானப் பகுதிகள் மற்றும் பொது நிறுவன வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் டெங்கு லார்வாக்கள் பெருகும் வகையில் அலட்சியமாகச் சூழலை வைத்திருப்போர் கண்டறியப்பட்டால், அவர்களுக்கு எதிராக எவ்வித சலுகையுமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு எச்சரித்துள்ளது.
இந்த மூன்று நாள் விசேட ஒழிப்புத் திட்டத்திற்குப் பொதுமக்கள் மற்றும் அரச, தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள் அனைவரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனச் சுகாதார அமைச்சு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளது.













