ருஹுனு பல்கலைக்கழகத்தின் மனிடவியல் மற்றும் சமூக அறிவியல் பீடத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
இது பல்கலைக்கழக வளாகத்திற்குள் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கவலைகளை மீண்டும் எழுப்பியுள்ளது.
மாத்தறை மாவட்டம் தெனியாயப் பகுதியைச் சேர்ந்தவரும், ருஹுனு பல்கலைக்கழகத்தின் 46-வது மாணவர் தொகுதியைச் சேர்ந்தவருமான சந்தலி தாரகா என்ற மாணவியே இந்த அகால மரணத்திற்கு ஆளானார்.
இறப்பதற்கு முன், அவர் தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவருக்கு, “நான் இறந்துபோகவில்லை என்றால் வருவேன்” என்று வாட்ஸ்அப் செய்தி அனுப்பியிருந்தார்.
அது அவள் தன் தோழிக்கு அனுப்பிய கடைசிச் செய்தி.
இந்த நிலையலி அவளது மறைவு பல்கலைக்கழகத்தையே ஆழ்ந்த அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
சந்தலி தாரகா மறைவு குறித்து சக மாணவர்கள் சமூக ஊடகங்களில் உருக்கமான பதிவுகளை வெளியிட்டுத் தங்கள் துயரத்தைப் பகிர்ந்துகொண்டதுடன், இனிவரும் எந்தவொரு பிறவியிலும் அவருக்கு இது போன்ற அகால மரணம் நேரிடக்கூடாது என்றும் பதிவிட்டுள்ளனர்.
அத்துடன், டெங்குவால் மற்றொரு மாணவரின் உயிர் பறிபோகும் வரை காத்திருக்காமல், பல்கலைக்கழக வளாகங்களுக்குள் டெங்கு கட்டுப்பாட்டுத் திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மாணவர்கள் அதிகாரிகளை வலியுறுத்தி வருகின்றனர்.












