ஈரானின் புதிய ஆன்மீக உயர் தலைவர் மொஜ்தபா கொமெய்னியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையை எட்டியுள்ளதாகவும், அவர் அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஈரான் ஆட்சியின் உயர் மட்டங்களில் இது குறித்துப் பரவலாகப் பேசப்பட்டு வருவதாகவும், அவரது மறைவு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியானாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் அச்செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய கூட்டு இராணுவத் தாக்குதலில் முன்னாள் உயர் தலைவர் அயதுல்லா அலி கொமெய்னி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவரது மகனான மொஜ்தபா கொமெய்னி புதிய உயர் தலைவராகப் பொறுப்பேற்றார்.
இருப்பினும், பதவியேற்ற நாள் முதல் அவர் பொது நிகழ்ச்சிகளிலோ அல்லது தனது தந்தையின் இறுதிச் சடங்கிலோ நேரடியாகப் பங்கேற்காமல் எழுத்துப்பூர்வ அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வந்தார்.
குறித்த தாக்குதலில் அவரும் காயமடைந்து தோற்றச்சிதைவுக்கு உள்ளானதால் தலைமறைவாக இருப்பதாகவும், அவர் ஈரானில் இல்லை என்று ஐக்கிய அரபு அமீரக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அளித்த பேட்டி ஒன்றில், குறிப்பிட்ட இராணுவ நடவடிக்கைக்குப் பிறகு கொமெய்னி 90% செயலிழந்துவிட்டதாகத் தெரிவித்திருந்தார்.
மேலும், ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனும் அவரை நேரடியாகத் தொடர்புகொள்வது கடினமாக உள்ளதை ஒப்புக்கொண்டிருந்தார். ஈரான் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருக்குச் சாதாரண காயங்களே ஏற்பட்டதாகத் தொடர்ந்து மறுத்து வந்த போதிலும், தற்போது இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ள இச்செய்தி குறித்து ஈரான் அரசு இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ மறுப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.













