அண்மைய அமைச்சரவை ஒப்புதலைத் தொடர்ந்து, திருத்தியமைக்கப்பட்ட பேருந்து கட்டணங்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) இன்று ஒரு சிறப்பு அறிவிப்பின் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
அதன்படி, எதிர்வரும் ஜூலை 6 நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்டு,குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 34 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அதிகபட்சக் கட்டணம் 2,422 ரூபாவிலிருந்து 2,902 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கட்டணங்களை விட அதிகமாகக் கட்டணம் வசூலிக்கும் எந்தவொரு நடத்துநருக்கும் எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எச்சரித்துள்ளது.
தேசியப் போக்குவரத்து கட்டணக் கொள்கை வகுக்கப்படும் வரை ஒரு இடைக்கால நடவடிக்கையாக கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் கட்டணத் திருத்தம் அங்கீகரிக்கப்பட்டது.
எரிபொருள் செலவுகள், பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்புச் செலவுகள், பணியாளர்கள் தொடர்பான செலவுகள், டயர் மற்றும் டியூப் செலவுகள், மூலதனத்திற்கான வட்டிச் செலவுகள் மற்றும் பிற தினசரி, மாதாந்திர மற்றும் வருடாந்திர பொதுச் செலவுகள் ஆகியவற்றை கருத்திற் கொண்டே இந்த பேருந்து கட்டண உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கூடுதல் கட்டணம் அறவிடப்படும் பேருந்து நடத்துனர்கள் தொடர்பில் 1955 என்ற துரித இலக்கம் மூலமாகவோ அல்லது 071 259 5555 என்ற எண்ணில் வாட்ஸ்அப் (WhatsApp) மூலமாகவோ முறைப்பாடு அளிக்க முடியும் என்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.













