ஐரோப்பா முழுவதும் வெப்பநிலையை வெகுவாக உயர்த்திய ஜூன் மாத வெப்ப அலையின்போது பிரான்ஸ், நெதர்லாந்து மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் 3,700 கூடுதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இந்த எண்ணிக்கை தற்காலிகமானது என்றும், இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சுமார் ஜூன் 20 முதல் 28 வரை நீடித்த இந்த வெப்ப அலை, ஐரோப்பாவில் பதிவானவற்றிலேயே மிகக் கடுமையானது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இது மின் உற்பத்தியில் இடையூறுகளை ஏற்படுத்தியதுடன், உள்கட்டமைப்புகளைச் சேதப்படுத்தியது மற்றும் சுகாதார அமைப்புகளுக்குப் பெரும் சுமையையும் அளித்தது.
இந்தத் தீவிர வெப்பநிலைக்குக் காலநிலை மாற்றமே முக்கியக் காரணமாக இருந்திருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
தீவிர வெப்ப அலை நிலவிய காலத்தில் பிரான்சில் 2,025 கூடுதல் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன என்றும், குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன என்றும் பிரான்சின் சுகாதார அமைச்சர் ஸ்டெஃபானி ரிஸ்ட் ( Stephanie Rist ) இன்று உள்ளூர் தொலைக்காட்சியிடம் தெரிவித்தார்.
முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் ஜூன் 22 முதல் 28 வரையிலான காலத்தில் வீடுகளில் நிகழ்ந்த உயிரிழப்புகள் 91% அதிகரித்துள்ளன.
அதேவேளையில் முதியோர் இல்லங்கள் மற்றும் சுகாதார நிலையங்களிலும் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளதாக அந்நாட்டின் பொது சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது.















