நாட்டின் வானிலையில் எல் நினோ தாக்கம் குறித்த புதுப்பிக்கப்பட்ட முன்னறிவிப்புகள் நாளை (06) அறிவிக்கப்படும் என எல் நினோ தாக்கத்தைக் கையாள்வதற்காக நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை துணைக்குழுவின் தலைவரும், சுற்றுச்சூழல் அமைச்சருமான தம்மிக படபெண்டி (Dammika Patabendi) தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு துறையிலும் ஏற்படும் தாக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை விபரிக்கும் திட்டங்கள் துணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
அந்த முன்மொழிவுகளை மதிப்பாய்வு செய்ததைத் தொடர்ந்து, எல் நினோவின் தாக்கத்தைக் கையாள்வதற்கான தேசிய செயல் திட்டம் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் கூறினார்.
இதேவேளை எல்நினோ தாக்கத்தால், நாட்டின் பல பகுதிகளில் தற்போது வறட்சியான காலநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை வலுவிழந்துள்ளதாகவும், எல் நினோவின் தாக்கத்தால் அடுத்த மாதம் நாடு முழுவதும் வறட்சியான காலநிலை நிலவக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்னே (Ajith Wijemanne) கூறினார்.
எவ்வாறாயினும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், எல் நினோ விளைவால், ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை நாடு முழுவதும் வறட்சியான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
பசிபிக் பெருங்கடல் பகுதியில் நிலவும் எல் நினோ நிலவரங்கள் குறித்து சர்வதேச வானிலை ஆய்வு நிறுவனங்கள் வெளியிடும் தகவல்கள் மற்றும் கணிப்புகளை கண்காணித்து நாட்டிற்கான வானிலை முன்னறிவிப்புகள் வெளியிடப்படும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்னே மேலும் கூறியுள்ளார்.












