செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட ஃபேஸ்புக்கில் செயல்படும் போலிப் பெண்கள் கணக்குகள் குறித்த இலங்கையின் முதல் முறையான ஆய்வை மூத்த ஆராய்ச்சியாளர் கலாநிதி சஞ்சனா ஹட்டோடுவ வெளியிட்டுள்ளார்.
பயனர்களை சூதாட்டம், வயது வந்தவர்களுக்கான உரையாடல் (adult chat), கிரிப்டோ மற்றும் பிற சந்தேகத்திற்குரிய நிதித் தளங்களை நோக்கி ஈர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு ஒருங்கிணைந்த வலைப்பின்னலை இந்த ஆய்வு வெளிப்படுத்துகிறது.
அந்த அறிக்கை 10 ஃபேஸ்புக் கணக்குகளை ஆய்வு செய்ததில், அவற்றில் ஒன்று கூட உண்மையான பெண்களுக்குச் சொந்தமானவை அல்ல என்று கண்டறிந்தது.
மாறாக, அந்தக் கணக்குகள் தனிமை, விதவை நிலை, விவாகரத்து அல்லது நிதி நெருக்கடி போன்றவற்றைச் சித்தரிக்கும் உணர்ச்சிப்பூர்வமான பதிவுகள் மூலம் பயனர்களை ஈர்ப்பதற்காக, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட அடையாளங்களைப் பயன்படுத்தி புனையப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
அந்த ஆய்வின்படி, குறிப்பிட்ட அந்த வலைப்பின்னல்கள் 1,706 பதிவுகளை வெளியிட்டது; இவை 8,90,000-க்கும் மேற்பட்ட ஈடுபாடுகளை (engagements) உருவாக்கின.
ஒரே மாதிரியான விளக்கக்குறிப்புகள் (captions), ஏறக்குறைய ஒரே மாதிரியான பதிவுகள் மற்றும் பல கணக்குகளில் சில நிமிடங்களுக்குள் பகிரப்பட்ட உள்ளடக்கம் உள்ளிட்ட ஒருங்கிணைந்த செயல்பாடுகளுக்கான ஆதாரங்களையும் அந்த அறிக்கை கண்டறிந்தது.
அரசியல் செல்வாக்கிற்காக இந்த வலையமைப்பு பயன்படுத்தப்பட்டதற்கான சான்றுகள் குறைவாகவே உள்ளன என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இருப்பினும், ஏமாற்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட அடையாளங்களைப் பயன்படுத்தி அது ஏற்கனவே பார்வையாளர்களையும் நம்பிக்கையையும் கட்டமைத்துள்ளதால், அதே உள்கட்டமைப்பை செல்வாக்குச் செயல்பாடுகளுக்காக மீண்டும் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று அது எச்சரிக்கிறது.
ஸ்பானிஷ், இத்தாலியன் மற்றும் மலையாளம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் இதேபோன்ற வலையமைப்புகள் செயல்படுவதை இந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.
இது, இலங்கையில் நடைபெறும் இந்தச் செயல்பாடு ஒரு பரந்த சர்வதேச மாதிரியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.
பல ஏமாற்று நடைமுறைகள் ஏற்கனவே உள்ள ஃபேஸ்புக் அம்சங்களைச் சார்ந்திருந்ததால், சாதாரண பயனர்கள் உண்மையான சுயவிவரங்களை செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட ஆளுமைகளிலிருந்து வேறுபடுத்துவது கடினமாக இருந்தது என்றும் ஆய்வினை மேற்கொண்ட சஞ்சனா ஹட்டோடுவ சுட்டிக்கட்டியுள்ளார்.













