கொழும்பு மாவட்டத்தில் டெங்கு தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த எட்டு பொது சுகாதார பரிசோதகர்களுக்கு (PHIs) டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெங்கு அச்சுறுத்தல் அதிகரித்து வரும் சூழலில் தங்கள் கடமைகளைச் செய்துகொண்டிருந்தபோது இந்த அதிகாரிகளுக்கு நோய் தொற்று ஏற்பட்டதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் கொழும்பு மாவட்டக் கிளைத் தலைவர் அமித் குமார் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர்,
கொழும்பு மாவட்டம் முழுவதும் டெங்கு பாதிப்பு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வரும் நிலையில், சுகாதாரத் துறையைச் சேர்ந்த வேறு பல ஊழியர்களுக்கும் இந்நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஜூன் மாதம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்போது, டெங்கு தடுப்பு தொடர்பான பொறுப்புகளை நிறைவேற்றத் தவறிய 1,186 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இத்தகைய அமுலாக்க நடவடிக்கைகளின் மூலம் அதிகாரிகள் 12.25 மில்லியன் ரூபாய் அபராதத் தொகையையும் வசூலித்துள்ளனர்.
ஜூன் மாதத்தில் 494 வீடுகள், 134 அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், நான்கு பாடசாலைகள் மற்றும் இரண்டு வழிபாட்டுத் தலங்களின் உரிமையாளர்கள் அல்லது பொறுப்பான தரப்பினர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சோதனை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும், தனிநபர்களின் அந்தஸ்து அல்லது பதவியைப் பொருட்படுத்தாமல் சட்டம் பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்தப்படும் – என்றார்.















