கடுவெல, மாலபே சுதர்ஷன மாவத்தையில் இரகசியமாக இயங்கிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தில் பயன்படுத்தப்பட்ட மதுபான பாட்டில்களுக்கான பாதுகாப்பு ஸ்டிக்கர்கள், இந்தியாவில் உள்ள ஸ்டிக்கர் அச்சிடும் நிறுவன மொன்றிலிருந்து பெறப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த தகவல், கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது வெளியாகியுள்ளது.
மேலும், குறித்த ஆடம்பர இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையில், உரிமம் பெற்ற மதுபானங்களைப் போன்று தயாரிக்கப்பட்டு லேபிள் மற்றும் பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட 18,000-க்கும் அதிகமான மதுபான போத்தல்களும், உற்பத்தி உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஒருவர் உட்பட ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போலி மதுபானங்கள் மலையகப் பகுதிகளிலும் கிழக்கு மாகாண மதுபான விற்பனை நிலையங்களுக்கும் விநியோகிக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 25 மதுபான விற்பனை நிலையங்களுக்கு இந்த போலி மதுபானங்களை விநியோகித்ததாகக் கூறப்படும் தொழிலதிபர் ஒருவரும், மதுபானங்களை ஏற்றிச் சென்ற லொறியும் அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், எத்தனால் மற்றும் ‘பிரிடெக்ஸ்’ (Britex) எனப்படும் இரசாயனப் பொருளை வழங்கியதாகக் கூறப்படும் வத்தளை பகுதியைச் சேர்ந்த நபரை கைது செய்யும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, இந்த சட்டவிரோத மதுபான ஆலை இயங்கிய வீட்டின் உரிமையாளர் தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருவதாகவும், அவரின் அறிவோடு இந்த நடவடிக்கை இடம்பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சட்டவிரோத மதுபான வியாபாரத்திற்கு சில கலால் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கிடைத்திருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.













