இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்ட காணொளி ஒன்றின் வாயிலாக வியாழக்கிழமை (23) இரவு நாட்டு மக்களுக்கு ஒரு முக்கியச் செய்தியை வழங்கியுள்ளார்.
தேர்வு தொடர்பான குளறுபடிகள் குறித்து மாணவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் மற்றும் அது சார்ந்த விவகாரங்கள் குறித்தே இந்தச் செய்தி அமைந்துள்ளது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரங்கள் குறித்துக் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும், உயர்கல்வி முறையில் சில சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதாகவும் அந்த செய்தியில் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
இச்செயல்முறையைச் சீரமைக்கவும், இதில் தொடர்புடைய குற்றவாளிகளை மிக விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தவும் மத்திய அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அவர் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, கல்வித் துறையை மறுசீரமைப்பது தொடர்பாக இந்திய அமைச்சரவை மற்றொரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.
மாணவர் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் சூழலில், கல்வி அமைச்சகத்தின் உயர்மட்ட அதிகார வர்க்கத்தில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய மாற்றத்தின் ஒரு பகுதியாக, நரேஷ் பால் கங்வார் புதிய கல்விச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேவேளையில், டி.கே. அனில் குமார் பாடசாலை கல்விச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளார்.
மாணவர்களின் தொடர் போராட்டத்தைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது நடைபெற்று வரும் நிகழ்வுகளுக்கான ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாகவும் இதைக் கருதலாம்.
இருப்பினும், கல்வி அமைச்சர் பதவியிலிருந்து தர்மேந்திர பிரதான் விலக வேண்டும் என்று மாணவர்கள் உறுதியாக வலியுறுத்தி வருகின்றனர்.















