தெஹிவளை துப்பாக்கிச் சூட்டு முயற்சி மற்றும் கல்கிசை தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
2026.07.19 அன்று தெஹிவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிசல அரண மயான பூமியில், மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்களால் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டு கொலை செய்ய முயற்சித்த சம்பவம் மற்றும் கல்கிசை பொலிஸ் பிரிவில் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் மேல் மாகாணம் தெற்கு பிராந்திய குற்றவியல் விசாரணைப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.
அதன்படி, விசாரணை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குறித்த குற்றச் செயல்களில் மோட்டார் சைக்கிளை செலுத்திய சந்தேகநபர் நேற்று (26) காலை மிரிஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கந்த பகுதியில் வைத்து ஐஸ் போதைப்பொருள் 07 கிராம் 200 மில்லிகிராம் உடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 25 வயதுடைய, அத்திடிய பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, மேற்குறித்த குற்றச் செயல்கள் தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள திட்டமிடப்பட்ட குற்றவாளி ஒருவரால் வழிநடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும், குற்றச் செயல்களுக்காக சந்தேகநபர் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசிகள் 03 மற்றும் குற்றச் செயல்களை மேற்கொள்வதற்காக சந்தேகநபருக்கு வழங்கப்பட்ட 02 இலட்சம் ரூபாய் பணத்தில் மீதமாக இருந்த 55,000 ரூபாய் பணமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேல் மாகாணம் தெற்கு பிராந்திய குற்றவியல் விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.














