மழை காரணமாகத் தாமதமான இரண்டு வொஷிங்டன் ஓபன் (DC Open) இறுதிப் போட்டிகளும் திங்கட்கிழமை (03) அன்று நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அலெக்ஸாண்ட்ரா ஈலா WTA ஒற்றையர் பிரிவு பட்டத்தை வென்ற பிலிப்பைன்ஸின் முதல் வீராங்கனை ஆனார்.
மேலும் டெய்லர் ஃபிரிட்ஸ் இந்தப் சீசனில் தனது முதல் கிண்ணத்தை வென்றார்.
மோசமான வானிலையால் பாதிக்கப்பட்ட மகளிர் இறுதிப்போட்டி மீண்டும் தொடங்கியபோது, முதல் நிலை வீராங்கனை ஜெசிகா பெகுலாவிடம் ஒரு செட் பின்தங்கியிருந்தாலும் இரண்டாவது செட்டில் 2-1 என முன்னிலையில் இருந்த ஈலா , இறுதியில் அவரை 4-6, 6-4, 6-0 என்ற கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார்.
2019 மற்றும் 2021-ல் வொஷிங்டன் பட்டங்களை வென்ற பெகுலா, தனது மூன்றாவது பட்டத்தை வெல்லும் முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும், ஆட்டத்தின் போக்கு ஈலாவின் பக்கம் முழுமையாகத் திரும்பியதைத் தடுக்க முடியாமல் போனார்.
அதேவேளையில், ஆண்கள் பிரிவின் விறுவிறுப்பான ஆட்டத்தில், மூன்றாம் நிலை வீரரான ஃபிரிட்ஸ் (Fritz), ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இளம் வீரர் ரஃபேல் ஜோடாரை (Rafael Jodar) 7-6 (2), 6-4 என்ற கணக்கில் தோற்கடித்தார்.
















