நடிகை த்ரிஷாவைக் குறிப்பிடுவதாகப் பலராலும் கருதப்படும் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றிற்காக, தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இன்று (04) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரால் அழைத்துச் செல்லப்படும்போது புன்னகைத்தபடியே காணப்பட்ட ஸ்டாலின், இந்தக் கைது நடவடிக்கையை ஒரு “வேடிக்கை” என்று குறிப்பிட்டதோடு, இதை “சட்டரீதியாக எதிர்கொள்வேன்” என்றும் கூறினார்.
காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாகத் தமிழக முதல்வர் விஜயையும், நடிகை த்ரிஷழவையும் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
பாலியல் ரீதியான மறைமுகக் குறிப்பாகவும், த்ரிஷாவுடனான விஜய்யின் நட்பைக் குறிப்பதாகவும் பரவலாகக் கருதப்படும் அந்தப் பேச்சுக்கு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
அந்தக் கருத்தைத் தொடர்ந்து, ஸ்டாலின் மீது தமிழ்நாடு பொலிஸார் வழக்குப்பதிவு செய்ததன் பின்னணியில் இந்த கைது இடம்பெற்றுள்ளது.
இதனிடையே, உதயநிதி ஸ்டாலின் நீலாங்கரையில் உள்ள இல்லத்தின் முன்பு இன்று காலை தமிழக வெற்றிக் கழகத்தின் போராட்ட அழைப்பைத் தொடர்ந்து ஏராளமான பொலிஸார் குவிக்கப்படிருந்தனர்.
காவிரி விவகாரம் குறித்துக் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய உதயநிதி, தமிழகத்திற்கு காவிரி நீரைப் பெற்றுத் தருவதில் அரசு தோல்வியடைந்ததைக் குறிப்பிட்டு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை விமர்சித்ததைத் தொடர்ந்து சர்ச்சை வெடித்தது.
அவர் உரையாற்றிக்கொண்டிருந்தபோது, கூட்டத்திலிருந்த ஒருவர் “த்ரிஷா, த்ரிஷா” என்று கூச்சலிட்டார்.
அதற்குச் சற்று இடைவெளி விட்டு உதயநிதி இருபொருள் படும்படி பதிலளித்தார்.
அவரது இந்தக் கருத்துக்கள் ஆபாசமானவை என்றும் பெண்களை இழிவுபடுத்துபவை என்றும் கூறி அரசியல் எதிர்ப்பாளர்கள் பரவலான விமர்சனங்களை முன்வைத்தனர்.
இந்த சர்ச்சை பெரிதாகி வந்த நிலையில், ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் (TVK), திமுக தலைவரை கடுமையாகச் சாடியது.
அதேநேரம், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை அந்தப் பேச்சை விமர்சித்து கேலி செய்தார்.
அத்துடன், உதயநிதி, நடிகை த்ரிஷாவிடம் நிபந்தனையற்ற பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக மாநிலத் துணைத் தலைவர் குஷ்பு சுந்தர் வலியுறுத்தினார்.
இருப்பினும், திமுக தனது தலைவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது. காவிரி விவகாரம் மற்றும் டெல்டா பகுதி விவசாயிகளின் துயர நிலை ஆகியவற்றிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் நோக்கில் அரசியல் உள்நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட சர்ச்சை இது என்று முன்னாள் அமைச்சர் டி. மனோ தங்கராஜ் குறிப்பிட்டார்.


















