கடுவலை பிரதான பேருந்து நிலையத்தின் வாரச் சந்தை வளாகத்திற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த சொகுசு பேருந்தொன்றுக்கு இன்று (05) அதிகாலை அடையாளம் தெரியாத இருவர் தீ வைத்து தப்பிச் சென்றுள்ளதாக கடுவலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதிவேக நெடுஞ்சாலை வழியாக கடுவலை – மாத்தறை சேவையில் ஈடுபட்டிருந்த குறித்த சொகுசு பேருந்தே தீக்கிரையாகியுள்ளதுடன், ஏற்பட்ட தீ விபத்தில் பேருந்து முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளது.
மேலும், அதற்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த கடுவெலை – கொழும்பு கொள்ளுப்பிட்டி வழித்தடத்தில் சேவையாற்றிய இரண்டு சாதாரண சேவை பேருந்துகளுக்கும் தீயினால் சிறியளவு சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று அதிகாலை 2.30 மணி முதல் 2.45 மணி வரையிலான நேரப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பேருந்துக்கு தீ வைப்பதை அருகில் இருந்த மற்றொரு பேருந்தில் தங்கியிருந்த சாரதி மற்றும் நடத்துநர் இருவர் கண்டு சத்தமிட்டதையடுத்து, சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் கூறினர்.
தீ வைக்கப்பட்ட வேளையில், சொகுசு பேருந்தின் உள்ளே சாரதி மற்றும் நடத்துநர் இருவரும் உறங்கிக் கொண்டிருந்ததாகவும், அருகிலிருந்த பேருந்தில் இருந்தவர்களின் எச்சரிக்கையால் அவர்கள் உடனடியாக வெளியேறி உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீவைப்பு சம்பவம் தனிப்பட்ட விரோதம் அல்லது பழிக்குப்பழி நோக்கில் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக கடுவலை பொலிஸாரின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடுவெலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.













