தமிழக வெற்றி கழகம் (TVK) தலைமையிலான அரசு இன்று (05) தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளது.
இதையொட்டி, தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு இடையே மோதல் போக்கு நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொதுக்கூட்டம் ஒன்றில் நடிகை த்ரிஷா குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு, பின்னர் சென்னை மேல் நீதிமன்றத்தின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாள் முக்கியத்துவம் பெறுகிறது.
பெண்களுக்கான மாதாந்திர ஊக்கத்தொகை உயர்வு, இலவசப் பேருந்து பயணம், முக்கிய வருவாய் சீர்திருத்தங்கள் மற்றும் ‘வெற்றித் தமிழகம்’ தொலைநோக்கு ஆவண வெளியீடு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இன்று சட்டப்பேரவையில் எதிர்பார்க்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் விஜய் தலைமையிலான அரசின் 2026-27-ஆம் நிதியாண்டிற்கான முதல் பட்ஜெட்டை, மாநில நிதியமைச்சர் என். மேரி வில்சன் தாக்கல் செய்வார்.
மாநில அரசு ஆகஸ்ட் 6 ஆம் திகதி வேளாண்மைக்கான பட்ஜெட்டையும் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளது.
திமுக தலைவரும் முன்னாள் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்ட விவகாரத்தால் தமிழ்நாட்டில் அரசியல் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் இது நிகழ்ந்துள்ளது.
சென்னை மேல் நீதிமன்றத்தின் தலையீட்டைத் தொடர்ந்து உதயநிதி விடுவிக்கப்பட்டார்.
திரைப்பட நடிகை ஒருவருக்கு எதிராக அவதூறான கருத்துகளைத் தெரிவித்த விவகாரம் தொடர்பாகவும் அவரிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர்.
விடுதலையான பிறகு, நிர்வாக ரீதியான தோல்விகளை மறைப்பதற்காகவே இந்தச் சட்ட நடவடிக்கை வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட ஒரு தந்திரம் என்று உதயநிதி வலியுறுத்தினார்.
காவேரிப் போராட்டத்தின் போது, உதயநிதி ஒரு கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருந்த வேளையில், கூட்டத்தில் இருந்த சிலர் “த்ரிஷா, த்ரிஷா” என்று கோஷமிட்டதால் இந்த சர்ச்சை வெடித்தது.














