கீவ் நகரின் மீது வியாழக்கிழமை (20) அதிகாலையில் ரஷ்யா ஏவிய ஏவுகணைத் தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததுடன், 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இத்தாக்குதலால் கட்டிடங்கள் சேதமடைந்ததுடன், உக்ரேனியத் தலைநகரின் சில பகுதிகளில் மின்சார விநியோகமும் துண்டிக்கப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
நகரின் சோலோமியன்ஸ்கி (Solomianskyi) மாவட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது மாடி குடியிருப்பு ஒன்றின் மேல் தளங்கள் சேதமடைந்தன.
அங்கு ஏழு பேர் உயிரிழந்ததாகத் தெரிவித்த மேயர் விட்டாலி கிளிட்ச்கோ, வெள்ளிக்கிழமையை துக்க நாளாக அனுசரிக்குமாறு அழைப்பு விடுத்தார்.
டெலிகிராம் (Telegram) செயலி மூலம் தகவல் தெரிவித்த கிளிட்ச்கோ, மேலும் இரண்டு மாவட்டங்களும் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், அங்கு குடியிருப்பு அல்லாத கட்டிடங்கள், கிடங்குகள், ஒரு பாடசாலை மற்றும் சிறுவர்கள் மருத்துவமனை ஆகியவை தாக்கப்பட்டதாகவும் கூறினார்.
தாக்குதலுக்குப் பின்னர் தலைநகரில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட சுமார் 90,000 வீடுகளில், பாதிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக மின்சார நிறுவனமான DTEK தெரிவித்துள்ளது.
பாலஸ்டிக் ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதற்கான ஏவுகணைகள் தங்கள் சிறிய அண்டை நாடான உக்ரேனிடம் மிகக் குறைவாக இருப்பதைப் பயன்படுத்திக்கொள்ளும் நோக்கில், ரஷ்யா அண்மைய மாதங்களில் உக்ரைன் மீதான வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது.
கீவ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மீது வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் ட்ரோன் பாகங்களைத் தயாரிக்கும் இடங்கள், இராணுவக் கிடங்கு, தளவாடப் போக்குவரத்து மையம் மற்றும் பிற இலக்குகள் தாக்கப்பட்டதாகவும் கூறியுள்ளது.















