கடந்த 24 மணி நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 8 வயதுச் சிறுமி உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ராகம – வல்பொல வீதியில் கட்டுப்பாட்டை இழந்த லொறியொன்று, எதிரே வந்த கார் மற்றும் மற்றொரு லொறியுடன் மோதியதுடன், வீதியோரமாக நடந்து சென்ற தாயையும் அவரது இரு பிள்ளைகளையும் மோதித் தள்ளியது. இதில் படுகாயமடைந்த 8 வயதுச் சிறுமி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். விபத்து தொடர்பாக லொறியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, இப்பலோகம – கலவேவ வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் மோதிய விபத்தில் ஒட்டமாவடியைச் சேர்ந்த 75 வயது முதியவரும், கணேமுல்ல – பஹலகொட பகுதியில் வீதியை கடக்க முயன்ற 67 வயது முதியவர் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் மற்றொருவரும் உயிரிழந்தனர்.
மேலும், யாழ்ப்பாணம் – கிளிநொச்சி வீதியில் இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பாலையைச் சேர்ந்த 18 வயது இளைஞன் உயிரிழந்தார்.
மரவில, கட்டுநெரிய பகுதியில் வீதியைக் கடக்க முயன்ற நபர் ஒருவர் லொறி மோதி உயிரிழந்துள்ளதுடன், உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. இவ்விபத்து தொடர்பில் லொறிச் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.















