கோரலைமா, கிரிவத்துடுவை பகுதியில் கடந்த 8 ஆம் திகதி 78 வயதுடைய முதியவர் ஒருவரை இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிய சந்தேகநபர் கெஸ்பேவை பிரதான பாலத்திற்கு அருகிலுள்ள புதர் ஒன்றில் பதுங்கியிருந்த போது கஹத்துடுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் கிரிவத்துடுவையைச் சேர்ந்த அமரதுங்க அரச்சிங்கே சிறிபால என்பவரே உயிரிழந்திருந்தார்.
சந்தேகநபர், உயிரிழந்த முதியவரின் 17 வயது பேரனுடன் இணைந்து போதைப்பொருள் பயன்படுத்தும் பழக்கமுடையவர் என்பதுடன், அன்றைய தினம் போதைப்பொருள் அருந்த இளைஞன் வராததால் ஆத்திரமடைந்து அவரது வீட்டிற்குச் சென்று தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதன்போது பேரனைக் காப்பாற்ற வந்த முதியவரை சந்தேகநபர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை செய்துள்ளமை ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலையின் பின்னர் எம்பிலிப்பிட்டிய மற்றும் பொரலஸ்கமுவ ஆகிய பகுதிகளுக்குத் தப்பிச் சென்ற சந்தேகநபர், பொலிஸாரிடமிருந்து தப்பிக்கும் நோக்கில் கெஸ்பேவ கிண்டல்பிட்டிய பாலத்திற்கு அருகிலுள்ள புதரில் பதுங்கியிருந்துள்ளார்.
ரகசியத் தகவலின் அடிப்படையில் கஹத்துடுவ பொலிஸ் நிலையத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கெஸ்பேவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை வரும் செப்டம்பர் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.














