பொரளை, லெஸ்லி ரணகல மாவத்தையில் உள்ள வீடொன்றை இலக்கு வைத்து இன்று காலை (23) மேற்கொள்ளப்பட்ட கையெறி குண்டுத் தாக்குதல், அக்குண்டு வெடிக்காததால் அசம்பாவிதம் ஏதுமின்றித் தவிர்க்கப்பட்டுள்ளது.
துபாயில் கைது செய்யப்பட்டுள்ள ‘வனதே சத்து’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரின் ஆதரவாளர் ஒருவரின் வீடே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேகநபர் ஒருவர் வீட்டின் மீது கையெறி குண்டை வீசிச் செல்லும் காட்சிகள் அப்பகுதியிலுள்ள சிசிடிவி (CCTV) கேமராவில் பதிவாகியுள்ளன.
தற்போது அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை கைப்பிடிக்கப் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மைக்காலமாக ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலகக் குழுக்களுக்கிடையே இவ்வாறான கையெறி குண்டுத் தாக்குதல்கள் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாகச் சுட்டிக்காட்டும் பாதுகாப்புப் படையினர், அண்மையில் ரத்மலானை – ஸ்ரீ ஞானேந்திர வீதியிலும் இதேபோன்று கையெறி குண்டுத் தாக்குதலொன்று நடத்தப்பட்டிருந்தமையை நினைவுகூர்ந்துள்ளனர்.













