பொலன்னருவை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நீர்த்தேக்கமான மின்னேரியா நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 36 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக நீர்ப்பாசனப் பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
110,000 ஏக்கர் அடி மொத்தக் கொள்ளளவைக் கொண்ட இந்நீர்த்தேக்கத்தின் தற்போதைய நீரிருப்பு 40,000 ஏக்கர் அடியாகக் குறைந்துள்ளது.
இருப்பினும், தற்போதைய யாலப் பருவச் செய்கைக்கான நீர் விநியோக நடவடிக்கைகள் இன்னும் இரு தினங்களில் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கமான பராக்கிரம சமுத்திரத்தின் நீர்மட்டமும் கணிசமாகக் குறைவடைந்துள்ளது.
116,000 ஏக்கர் அடி கொள்ளளவு கொண்ட பராக்கிரம சமுத்திரத்தில் தற்போது 63,000 ஏக்கர் அடி நீரே காணப்படுகின்றது.
இது அதன் மொத்தக் கொள்ளளவில் 56 சதவீதமாகும். இந்நீர்த்தேக்கத்திலிருந்து யாலப் பருவச் செய்கைக்காக மேற்கொள்ளப்பட்டு வந்த நீர் விநியோகம் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், 21,600 ஏக்கர் அடி கொள்ளளவு கொண்ட கிரித்தலே நீர்த்தேக்கத்தின் நீரிருப்பும் வேகமாகச் சரிவடைந்து 8,500 ஏக்கர் அடியாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாக, யாலப் பருவத்திற்காகக் கிரித்தலே நீர்த்தேக்கத்திலிருந்து திறக்கப்பட்டு வந்த நீர் விநியோகம் தற்போது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.













