மருத்துவக் குழுக்களிடையே மோதல்களை உருவாக்கி, மருத்துவ சேவையையும் இலவச சுகாதார அமைப்பையும் பாரிய நெருக்கடிக்குள் தள்ள அரசாங்கம் முயல்வதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது.
நிபுணத்துவ மருத்துவர்களுக்கும் ஏனைய மருத்துவக் குழுக்களுக்குமிடையே பிளவை ஏற்படுத்தும் நோக்கில் அரசியல் ரீதியிலான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகச் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டில் நிலவும் பொருளாதார மற்றும் சமூகச் சூழ்நிலைகளுக்கு மத்தியில், மருத்துவர்களை நாட்டில் தக்கவைத்துக்கொள்வதற்காகச் சுகாதார அமைச்சு மற்றும் மருத்துவத் தொழில்முறை சங்கங்கள் இணைந்து “இலங்கை மருத்துவ சேவை” என்ற புதிய சேவைப் பிரிவையும் ஊதியக் கட்டமைப்பையும் உருவாக்க முன்மொழியப்பட்டது.
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பின் போது இது தொடர்பில் தமக்கு உறுதியளிக்கப்பட்டதாகவும் சங்கம் நினைவுகூர்ந்துள்ளது.
இருப்பினும், தற்போது நிபுணத்துவ மருத்துவர்களுக்கு மட்டும் தனியாகச் சேவைப் பிரிவொன்றை நிறுவுவதற்கு முன்மொழிவு செய்யப்பட்டுள்ளதால், மருத்துவத் துறையினரிடையே பிளவு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
இவ்வாறான ஒருதலைப்பட்சமான நடவடிக்கை இலவச சுகாதாரச் சேவைக்கும் நோயாளி பராமரிப்பிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்ள முடியாது எனச் சங்கம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான குழுவின் அறிக்கை நகல் இதுவரை தம்மிடம் ஒப்படைக்கப்படாத நிலையில், எதிர்கால நடவடிக்கைகள் குறித்துத் தீர்மானிக்க அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அவசரக் கூட்டம் நாளை (31) நடைபெறவுள்ளது.
மருத்துவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன், ஒற்றுமையுடன் செயற்படக்கூடிய முழுமையான இலங்கை மருத்துவ சேவையை உருவாக்குவதற்கா உரையாடல்கள் இக்கூட்டத்தில் முன்னெடுக்கப்படும் எனச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.
















