அரசாங்கத்தால் அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஊழல் தடுப்புச் சட்டத் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் இன்று (03) தொடங்கியது.
நீதிபதிகள் ஷிரான் குணரத்ன, மஹிந்த சமாயவர்தன மற்றும் சம்பத் விஜயரத்ன ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
முன்னாள் அமைச்சர் ஜி.எல். பீரிஸ் தாக்கல் செய்த மனு உட்பட மொத்தம் 14 மனுக்கள் இதற்காகத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சட்டமூலத்தில் உள்ள பல சரத்துகள் அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை, குறிப்பாக மக்களின் இறைமையை மீறுவதாக மனுதாரர்கள் வாதிடுகின்றனர்.
மேலும், முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டம் தகவல் அறியும் உரிமையைக் கட்டுப்படுத்துவதாகவும், இது வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்த கவலைகளை எழுப்புவதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த சட்டமூலம் சட்டமாக்கப்பட வேண்டுமானால், அதற்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு தேவைப்படுவதுடன், பொது வாக்கெடுப்பு மூலமும் அது அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்குமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்தைக் கோரியுள்ளனர்.













