உலகத் தரம் வாய்ந்த ஒலிம்பிக் நகரம் மற்றும் மோட்டார் விளையாட்டுக்கென பிரத்யேக நகரம் ஆகியவற்றை அமைக்கும் திட்டங்களை அறிவித்து, தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் விளையாட்டுத் துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.
தமிழக சட்டமன்றத்தில் இன்று (03) உரையாற்றிய முதலமைச்சர், சென்னையில் ‘தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்’ (Tamil Nadu Olympic City) அமைக்கப்படவுள்ளதாக அறிவித்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் உருவாக்கப்படவுள்ள இந்த வளாகத்தில், உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு அரங்குகள், அதிநவீன பயிற்சி வசதிகள், உயர்திறன் பயிற்சி மையங்கள், விளையாட்டு அறிவியல் மற்றும் விளையாட்டு மருத்துவ மையங்கள் உள்ளிட்ட நவீன உள்கட்டமைப்புகள் இடம்பெறவுள்ளன.
மேலும், விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுக்கான தங்குமிட வசதிகளும் இதில் உருவாக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் தமிழக வீரர்கள் அதிக பதக்கங்களை வெல்லும் நோக்கில், பயிற்சி, ஆராய்ச்சி மற்றும் ஆதரவு வசதிகளை ஒருங்கிணைக்கும் மையமாக இந்த ஒலிம்பிக் நகரம் செயல்படும் என முதலமைச்சர் குறிப்பிட்டார்.
அதேவேளை, ஃபார்முலா 1 மற்றும் ஃபார்முலா 4 கார் பந்தயங்களை நடத்துவதற்காக சென்னையில் பிரத்யேக மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம் ஒன்றும் உருவாக்கப்படவுள்ளதாக அவர் அறிவித்தார்.
இளைஞர்களின் திறமைகளை கண்டறிந்து, தேசிய மற்றும் சர்வதேச தரத்தில் வெற்றியாளர்களை உருவாக்கும் வகையில் பயிற்சிகள் மற்றும் போட்டி வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
உலகத் தரம் வாய்ந்த கார் பந்தய வசதிகள் உருவாக்கப்படுவதன் மூலம் சுற்றுலாத்துறை, வாகன உற்பத்தித் தொழில், வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகும் என முதலமைச்சர் விஜய் நம்பிக்கை வெளியிட்டார்.
இதனிடையே, 2028 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் மீண்டும் ஃபார்முலா 1 (F1) பந்தயத்தை நடத்தும் நோக்கில், மோட்டார் விளையாட்டுக்களின் மேம்பாட்டிற்காக இந்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சகம் அண்மையில் விசேட பணிக்குழுவை அமைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.















