ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடையதாகக் கருதப்படும், தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள மனோஜ் சுரங்க லியனகே எனப்படும் ‘பட்டுவத்தை சாமர’ என்பவருக்குச் சொந்தமான சொகுசு வாகனம் மற்றும் ரூ.400 இலட்சம் மதிப்புடைய மூன்று மாடி வீடு உள்ளிட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளளன.
இந்த தகவலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் (CID) சட்டவிரோத சொத்து விசாரணைப் பிரிவு இன்று (03) கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் அறிவித்துள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குற்றப் புலனாய்வு திணைக்களம் முன்வைத்த தகவல்களை பரிசீலித்த பின்னர் நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேலும் நீதிமன்றத்தில் விளக்கமளித்த குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள், சந்தேகநபர் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகள் மூலம் சட்டவிரோதமாக பெருமளவு சொத்துக்களை குவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.













