சட்டத்தின்படி அத்தியாவசியமாக குறிப்பிடப்பட வேண்டிய நுகர்வோர் தகவல்களை உள்ளடக்காமல் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 6 தாய்லாந்து காவிகளை கைப்பற்றிய சம்பவம் தொடர்பாக, மருதானையிலுள்ள தனியார் நிறுவனத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
கடந்த 2026 ஒகஸ்ட் 10 ஆம் திகதி நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது, குறித்த வணிக நிறுவனத்தினால் அதிகபட்ச சில்லறை விலை, உற்பத்தியாளர் அல்லது இறக்குமதியாளரின் முகவரி, தொலைபேசி இலக்கம் மற்றும் உற்பத்தி செய்யப்பட்ட திகதி என்பன அச்சிடப்படாத 6 தாய்லாந்து காவிகள் பொதி செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.
2015 ஜூன் 11 ஆம் திகதியிட்ட 1918/20 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டளை இலக்கம் 55 ஐ மீறிய குற்றச்சாட்டின் கீழ் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வழக்குத் தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரணை செய்த கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், கடந்த 2 ஆம் திகதி பிரதிவாதியான நிறுவனத்திற்கு இந்த அபராதத்தை விதித்து தீர்ப்பளித்தது.
தயாரிப்பு விபரம் தெரியாத மற்றும் தரமற்ற பொருட்கள் சந்தைக்கு வரும் போக்கு காணப்படுவதால், அவற்றை பயன்படுத்தும் பிக்குகள் பல சிரமங்களை எதிர்நோக்குவதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
சில பொதிகளுக்குள் பயன்பாட்டிற்கு ஒவ்வாத அல்லது பொருத்தமற்ற பொருட்கள் உள்ளடக்கப்பட்ட சம்பவங்களும் பதிவாகியுள்ளன.
எனவே, காவி உடைகளை கொள்வனவு செய்யும்போது பொதுமக்கள் பின்வரும் விடயங்கள் குறித்து கவனமாகச் செயற்படுமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது.
பொதியில் அவசியமான நுகர்வோர் தகவல்கள் (விலை, உற்பத்தி திகதி, உற்பத்தியாளர்/இறக்குமதியாளரின் தகவல்கள்) தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளதா எனப் பரிசோதித்தல்.
இயன்ற வரை பொதியைத் திறந்து உள்ளே உள்ள பொருட்களின் தரம் மற்றும் பொருத்தமான தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ளுதல்.
சரியான தகவல்கள் அடங்கிய ரசீதை பெற்றுப் பத்திரமாக வைத்திருத்தல் என்பன தொடர்பில் கவனம் செலுத்துமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.













