சீனாவில் தயாரிக்கப்பட்ட, சுமார் 3 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சிகரெட் தொகுப்பை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) வழியாக இலங்கைக்குள் கடத்தியதாகக் கூறப்படும் சீனப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றும் 38 வயதான சீன நாட்டவரான சந்தேகநபர், சிகரெட்டுகளுடன் விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றபோது, நேற்று இரவு (21) விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (PNB) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் சீனாவில் சிகரெட்டுகளை வாங்கி மலேசியாவின் கோலாலம்பூருக்குச் சென்று, பின்னர் நேற்று இரவு சுமார் 10.30 மணியளவில் ஏர் ஏசியா (AirAsia) விமானம் AK-047 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சோதனையின்போது, அவரது உடைமைகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த, சீனாவில் தயாரிக்கப்பட்ட மொத்தம் 20,000 சிகரெட்டுகள் அடங்கிய 100 பெட்டிகளை அதிகாரிகள் கண்டறிந்தனர்.
சந்தேக நபர் மற்றும் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட சிகரெட்டுகள், மேலதிக விசாரணைகளுக்காக இன்று (22) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளன.












