யேமனில் பல முனைகளிலும் மோதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் ஏடன் சர்வதேச விமான நிலையத்தின் மீது புதன்கிழமை (07) அதிகாலையில் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியதாக யேமன் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது;
அதேவேளையில், சவுதித் தலைநகர் ரியாத்திற்கு வடக்கே ஹவுத்தி அமைப்பின் பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை இடைமறித்து அழித்ததாக சவுதி தலைமையிலான கூட்டுப்படை அறிவித்துள்ளது.
கெய்ரோவிலிருந்து வந்த விமானம் தரையிறங்குவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்பு, விமான நிலைய ஓடுபாதைக்கு அருகே ஒரு ஏவுகணை விழுந்ததாக அமைச்சகம் தெரிவித்தது.
அதிகாரிகள் அந்த விமானத்தின் தரையிறக்கத்தை இரத்து செய்து அதை ஜெட்டாவிற்குத் திருப்பிவிட்டனர்.
அதேவேளையில், மேலும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அச்சத்தால் ஓடுபாதையில் இருந்த இரண்டு விமானங்கள் அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டன என்றும் அது மேலும் கூறியது.
ஹவுத்தி அமைப்பிடமிருந்து இது குறித்து உடனடியாக எந்தக் கருத்தும் வெளியாகவில்லை.
ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இல்லாத யேமனின் பகுதிகளுக்கான முக்கிய சர்வதேச நுழைவாயிலாக ஏடன் சர்வதேச விமான நிலையம் விளங்குகிறது.
ஏமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கத்தை ஆதரிக்கும் சவுதி தலைமையிலான கூட்டணிப் படைகள், ரியாத்திற்கு வடக்கே ஹவுத்தி அமைப்பின் பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை இடைமறித்து அழித்ததாகத் தெரிவித்தன.
ஹவுத்திகளின் கட்டுப்பாட்டில் உள்ள சனா நகருக்கு மேல் அந்த ஏவுகணை ஏவப்பட்ட தளத்தைக் கண்காணித்து வருவதாகவும், அதை அழிக்கப்போவதாகவும் அக்கூட்டணி கூறியது.
எனினும், உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தை நோக்கிப் பல ட்ரோன்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியதாக ஹவுத்தி அமைப்பின் இராணுவப் பேச்சாளர் யஹ்யா சரீ ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
இந்த விமான நிலையத்தின் மீதான தாக்குதல் குறித்து சவுதி தரப்பிலிருந்து உடனடி உறுதிப்படுத்தல் எதுவும் வெளியாகவில்லை.
அண்மைய வாரங்களில் யேமனின் செங்கடல் கடற்கரைப் பகுதியில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சில பகுதிகளைக் கைப்பற்றியிருந்த நிலையில், அவர்களுக்கு எதிராக சவுதி ஆதரவு அரசுப் படைகள் எதிர் தாக்குதலை தொடங்கியதையடுத்து, யேமனின் பல்வேறு முனைகளிலும் மோதல்கள் தீவிரமடைந்த சூழலில் இந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன.
முக்கியத்துவம் வாய்ந்த பாப்-எல்-மண்டேப் (Bab el-Mandeb) நீரிணை மற்றும் மோச்சா (Mocha) நகரைச் சுற்றியுள்ள செங்கடல் கடற்கரைப் பகுதிகளை மீண்டும் கைப்பற்ற, யேமன் அரசுப் படைகள் சவூதி தலைமையிலான கூட்டுப் படையின் வான்வழி ஆதரவுடன் இந்த வாரம் மின்னல் வேகத் தாக்குதலைத் தொடங்கின.
இதன் மூலம், கடந்த மாதம் ஹூதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியிருந்த பகுதிகளிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.















