அச்சு இயந்திரங்கள் மற்றும் வெற்று அட்டைகளின் (blank cards) பற்றாக்குறை காரணமாக 673,000 சாரதி அனுமதிப்பத்திரங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் ஏர் வைஸ் மார்ஷல் துஷார பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாடு தொடர்பான அமைச்சரவை ஆலோசனைக்குழுவில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தற்போது கையிருப்பில் உள்ள பத்து லட்சம் அட்டைகள் ஜனவரி மாதத்திற்குள் தீர்ந்துவிடும் என்றும், புதிய விநியோக ஒப்பந்தத்தின் கீழ் இருபது லட்சம் அட்டைகளைக் கொண்ட முதல் தொகுதி அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் வந்து சேரும் என்றும் அவர் கூறினார்.
இந்தத் தட்டுப்பாட்டைச் சமாளிப்பதற்காக, அடுத்த இரண்டு மாதங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய, தற்போதுள்ள விநியோகஸ்தரிடமிருந்து மேலதிகமாக 5 லட்சம் அட்டைகளைப் பெறுவதற்கு அமைச்சரவையின் அனுமதியைப் பெற அவர் முன்மொழிந்துள்ளார்.
ஆணையாளர் நாயகத்தின் கூற்றுப்படி, நிலுவையில் உள்ள சாரதி அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான பணிகள் அடுத்த ஆண்டு பாதியளவில் முழுமையாகத் தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில், வாகன இலக்கத் தகடுகளின் (number plates) பற்றாக்குறை காரணமாக, சுமார் 450,000 வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணிகள் இன்னும் நிலுவையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.














