அதிக விலைவாசி மற்றும் பொதுச் சேவைகளின் சீரழிவு ஆகியவற்றிற்கு எதிராக சனிக்கிழமையன்று (17) பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது, கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான குழப்பங்கள் ஏற்பட்டன.
இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரோன் அமைதி காக்குமாறு ஞாயிற்றுக்கிழமையன்று (18) நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் வன்முறையின் விளைவாக நாடு முழுவதும் 2,400 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், சுமார் 1,000 காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளதாகவும் உள்துறை அமைச்சர் லோரன்ட் நுனெஸ் தெரிவித்தார்.
பிரான்ஸ் முழுவதும் மோதல்கள் மற்றும் சேதங்கள்
சனிக்கிழமையன்று நாடு முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டங்கள் வன்முறையாக மாறின; பல நகரங்களில் குழுக்கள் காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டன.
கலவரக்காரர்கள் ஒரு நகர மன்றத்திற்குத் தீ வைத்தனர், கடைகளைக் கொள்ளையடித்தனர் மற்றும் கட்டிடங்களில் சுவரெழுத்துக்களை எழுதினர், அதே நேரத்தில் மற்ற வணிக நிறுவனங்களும் சேதமடைந்தன.
சனிக்கிழமை பாரிஸில் நடந்த போராட்டங்களின் போது, ஒரு ஆர்ப்பாட்டக்காரர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
பாரிஸ் மற்றும் மார்சேய் நகரங்களில் மேலும் மோதல்கள் வெடித்தன; வணிக நிறுவனங்களைக் கொள்ளையடிக்கும் முயற்சிகளைத் தடுக்க கலவரத் தடுப்புக் காவல்துறையினர் தலையிட்டனர்.
இந்த வன்முறைக்கு, தீவிர இடதுசாரிக் குழுக்களே காரணம் என்று அரசாங்கம் கூறியதுடன், குற்றவாளிகளே இந்தக் கொள்ளையைத் தூண்டியதாகவும் தெரிவித்தது.
வலதுசாரி அரசியல்வாதிகள் சிலர் அவசரநிலையை அறிவிக்குமாறு வலியுறுத்திய போதிலும், மேக்ரான் அவ்வாறு செய்யவில்லை.
பொதுக் கட்டிடங்களையும் உள்ளூர் வணிக நிறுவனங்களையும் பாதுகாப்பதற்காக, தேவைப்படும் இடங்களில் போராட்டங்களைத் தடை செய்ய மாவட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கும் நடவடிக்கைகளைத் தனது அரசாங்கம் மேற்கொள்ளும் என்று அவர் தெரிவித்தார்.
சனிக்கிழமையன்று நிகழ்ந்த வன்முறை, மேக்ரான் மீதான மக்களின் ஆத்திரத்தின் ஆழத்தை வெளிப்படுத்தியது.
2027-ல் அவர் பதவியிலிருந்து விலக உள்ளார். அவரது 10 ஆண்டுகால ஆட்சிக்காலம், பொதுமக்களின் அதிருப்தி, பொருளாதார பலவீனம் மற்றும் வேகமாக அதிகரித்து வரும் கடன் சுமை ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தது.















