நாட்டின் தேசிய மற்றும் இயற்கையின் மரபுரிமையான ‘காவந்திஸ்ஸ’ யானையின் துயரமான இறப்பு குறித்த உண்மையை வெளிக்கொணர்வதற்கும், இச்சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் தங்களது பொறுப்புகளை சரிவர நிறைவேற்றியுள்ளனரா என்பதை உறுதிப்படுத்துவதற்கும், அந்த யானைக்கு நீதியை நிலைநாட்டுவதற்கும் எதிர்க்கட்சியினால் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவொன்று கோரப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் தலைமையில், எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பத்துடன் பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவொன்றை நியமிக்குமாறு கோரும் முன்மொழிவு இன்று (23) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, காவந்திஸ்ஸ யானையின் இறப்பு குறித்து ஆராய்வது போன்று, தற்போது வாழும் யானைகளின் தலைமுறையைப் பாதுகாப்பதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், இது அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒரு விடயம் என்றும் இங்கு தெரிவித்தார்.
மேலும், காலநிலை மாற்றம் தொடர்பாக பாராளுமன்றக் குழுவானது கட்சி பேதமின்றி இணைத் தலைமையின் கீழ் வெற்றிகரமாகச் செயற்பட்டு வருவதால், காவந்திஸ்ஸ யானையின் இறப்பு குறித்து ஆராயும் இந்தக் குழுவையும் அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியின் இணைத் தலைமையின் கீழ் அமைக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்கள் இதன்போது சபாநாயகரிடம் முன்மொழிந்தார்.













