வங்கக் கடலில் ‘அர்னாப்’ (Arnab) புயல் உருவாகியுள்ளது.
இந்தப் புயல் இன்று (26) நள்ளிரவுக்குள் தீவிர புயலாகவும், நாளைய (27) தினத்துக்குள் மிகத் தீவிர புயலாகவும் வலுவடையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு நிலையம் (IMD) எதிர்வு கூறியுள்ளது.
கிழக்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த ஆறு மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்து, ‘அர்னாப்’ (Arnab) புயலாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இன்று காலை 5:30 மணிக்கு, இந்த வளிமண்டல அமைப்பு வங்காள விரிகுடாவின் கிழக்கு-மத்திய மற்றும் அதனை ஒட்டிய மேற்கு-மத்திய பகுதிகளில் நிலைகொண்டிருந்தது.
இது அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள ஸ்ரீ விஜய புரத்திற்கு வடமேற்கே சுமார் 590 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு கிழக்கு-தென்கிழக்கே 650 கி.மீ தொலைவிலும், காக்கிநாடாவிற்கு கிழக்கு-தென்கிழக்கே 730 கி.மீ தொலைவிலும், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மசூலிப்பட்டினத்திற்கு கிழக்கே 830 கி.மீ தொலைவிலும், பாபட்லாவிற்கு கிழக்கே 910 கி.மீ தொலைவிலும் அமைந்திருந்தது.
இந்தப் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று நள்ளிரவுக்குள் வங்காள விரிகுடாவின் மேற்கு-மத்திய பகுதியில் தீவிர சூறாவளியாக வலுப்பெற அதிக வாய்ப்புள்ளது.
மேலும், நாளை (27) அதே பகுதியில் இது மிகத் தீவிர சூறாவளியாக வலுப்பெறக்கூடும்.
இதன்பிறகு, இந்த அமைப்பானது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, ஒக்டோபர் 28-ஆம் திகதி முற்பகல் நேரத்தில், மிகவும் தீவிரமான சூறாவளி புயலாக ஆந்திரப் பிரதேச கடற்கரையில் பாபட்லா மற்றும் விசாகப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அப்போது காற்றின் வேகம் மணிக்கு 115 முதல் 125 கி.மீ. வரை இருக்கும் என்றும், அவ்வப்போது 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தமிழகக் கடற்கரைப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்தப் பகுதி நீடிக்கிறது. இதனுடன் தொடர்புடைய வளிமண்டலச் சுழற்சி, கடல் மட்டத்திலிருந்து 7.6 கி.மீ உயரம் வரை பரவியுள்ளது.
மேலும், லட்சத்தீவிலிருந்து இந்தச் சுழற்சி வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நீடித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிற்கு கனமழை எச்சரிக்கை
இந்த வளிமண்டல அமைப்பின் தாக்கத்தால், ஒக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை தொடரும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், மாநிலத்தின் சில பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சி, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஒக்டோபர் 27 அன்று, ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஒக்டோபர் 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.














