வறுமையை வெல்வோம்; வளமான கிராமங்களை உருவாக்குவோம்; மக்களின் சக்தியால் நாட்டைக் கட்டியெழுப்புவோம்” என்ற நோக்கில் முன்னெடுக்கப்படும் பிரஜாசக்தி தேசிய வறுமை ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று (28) கிளிநொச்சியில் நடைபெற்றது.
கிளிநொச்சியில் உள்ள தனியார் விருந்தகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிராமிய மக்களை வலுவூட்டும் தேசிய சமூக வலுவூட்டல் வேலைத்திட்டம் தொடர்பில் வடமாகாண சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
வறுமை என்பது பொருளாதாரப் பற்றாக்குறையை மாத்திரம் குறிக்கவில்லை என்பதுடன், வாய்ப்புகள், வளங்கள் மற்றும் முன்னேற்றத்திற்கான அணுகல் ஆகியவற்றுடனும் தொடர்புடைய சவாலாகும். இதனை மக்களின் பங்கேற்புடன் எதிர்கொண்டு, நிலையான கிராமிய அபிவிருத்தியை ஏற்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இந்நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உப்பாலி பன்னில பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். மேலும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், சமூக சக்தித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர், 2026ஆம் ஆண்டில் பிரஜாசக்தி திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு தலா 324 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இதற்கமைய, முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள 363 கிராமங்களுக்கும், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 325 கிராமங்களுக்கும் இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கிராமியத் தொழில்முயற்சிகளை ஊக்குவித்தல் மற்றும் கிராம அபிவிருத்தியை முன்னெடுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்காக மேலதிக நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டது.
இத்திட்டத்தின் கீழான அபிவிருத்திப் பணிகள் மாவட்டச் செயலாளர்கள், மாவட்டத் திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட மாவட்ட மற்றும் பிரதேச நிர்வாக அதிகாரிகளின் தலைமையில் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், வருமானத்தை அதிகரித்தல் மற்றும் ஒதுக்கப்பட்ட நிதியைத் திறம்படப் பயன்படுத்தி கிராமங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஏற்படுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய இலக்குகளாகும்.














