மீரியபெத்த மண்சரிவு அனர்த்தம் இடம்பெற்று 12 ஆண்டுகள் கடந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை காணி உரிமைகள் வழங்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு!
அப்புத்தளை நகரில் இன்று (29) கருப்புக் கொடிகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கொஸ்லாந்தை மீரியபெத்த மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனர்த்தம் இடம்பெற்று சுமார் 12 ஆண்டுகள் கடந்தும் இதுவரை காணி உரிமைகள் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து கோஷங்களை எழுப்பினர்.
அதேவேளை, தித்வா புயலினால் பாதிக்கப்பட்ட அப்புத்தளை கல்காந்த தோட்ட மக்களுக்கும் இதுவரை வீடுகளும் காணிகளும் வழங்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணி மற்றும் வீட்டு உரிமைகளை விரைவாக வழங்குவதற்கு உரிய அதிகாரிகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர்.













