போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் “நாட்டை ஒன்றிணைப்போம்” தேசிய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இன்று (29) “நாட்டை ஒன்றிணைப்போம்” தேசிய நடவடிக்கையின் தலைமைக் காரியாலயம் மற்றும் ஊடக மையத்தில் நடைபெற்றது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை இராணுவத்தின் ஊடகப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் வருண கமகே, இலங்கை கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கமாண்டர் சமிந்த வளாகுளுகே, இலங்கை விமானப்படையின் ஊடகப் பேச்சாளர் குரூப் கெப்டன் நலின் வெவகும்புர மற்றும் இலங்கை பொலிஸின் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எப். யூ. வுட்லர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன்போது, “நாட்டை ஒன்றிணைப்போம்” தேசிய நடவடிக்கைக்கு முப்படையினரும் இலங்கை பொலிஸாரும் வழங்கிய பங்களிப்பு மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
இதற்கமைய, போதைப்பொருட்களைக் கைப்பற்றுதல், போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய கடத்தல்காரர்களுக்குச் சொந்தமான சட்டவிரோத சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள், சர்வதேச சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்து நாட்டிற்கு அழைத்து வருதல், கடல் வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்தி வருபவர்களைக் கடற்படையினர் கைது செய்தல் உள்ளிட்ட தேசிய நடவடிக்கையுடன் தொடர்புடைய பாதுகாப்புப் பிரிவுகளின் செயல்பாடுகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் தொடர்பான புள்ளிவிவரங்கள் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டன.














