ஆய்வாளரும், ஆவணக்காப்பாளரும் தகவல் களஞ்சியமுமான – ஓய்வு நிலை விரிவுரையாளர் ரஞ்சித் ஜெயகர் எழுதிய ‘காலம் மறந்த கதை’ -நினைவுகளின் தெருக்களில் ஒரு பயணம் – எனும் நூலின் அறிமுக விழா வருகின்ற 2026 நவம்பர் முதலாம் திகதி சனிக்கிழமை மாலை 3:30 மணிக்கு வத்தளை நகரசபை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
எழுத்தாளரும் பதிப்பாளருமான மல்லியப்புசந்தி திலகர் தலைமையில் சரத் சந்திரன் வரவேற்புரையை வழங்கி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவார்.
பேராசிரியர் ஏ.எஸ்.சந்திரபோஸ் கரங்களில் முதற் பிரதியை தொழிலதிபரும் ஆலய அறங்காவலருமான எம். சுப்பிரமணியம் பெற்றுக் கொள்வார்.
நூலறிமுக உரையினை ஓய்வு நிலை அதிபரும் மூத்த பத்திரிகையாளருமான வி.எஸ்.நவமணி வழங்க, விமர்சன உரைகளை சமூக ஆய்வாளர் கமலேஸ்வரி லெட்சுமணன், சமூக ஆய்வாளரும் இலக்கிய விமர்சகருமான தெ. மதுசூதணன் ஆகியோர் வழங்க உள்ளனர்.
நிகழ்வின் சிறப்பு அதிதியாக பெருந்தோட்ட கைத்தொழில், சமூக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
ஏற்புரையை நூலாசிரியர் ரஞ்சித் ஜெயகர் ஆற்றவுள்ள தோடு அவருக்கு 2026 ஆம் ஆண்டுக்கான ‘தெளிவத்தை ஜோசப் ஞாபகார்த்த விருதும்’ வழங்கப்படவுள்ளது.
அவரது ஆவணக்காப்பு ஆயவுகள், தகவல் களஞ்சியமாக தன்னைத் தகவமைத்துக் கொண்டுள்ளமையைகௌயவித்தே மேற்படி விருது வழங்கப்படவுள்ளது.

வத்தளையில் இயங்கிவரும் தெளிவத்தை ஜோசப் ஆய்வகம், ஆவணகம் இந்த விருதினை சாகித்திய ரத்ன தெளிவத்தை ஜோசப் அவர்களின் மறைவினை அடுத்து அன்னாரது நினைவேந்தல் நாளில் அன்னாரது ஆவணக்காப்பு, ஆய்வு மற்றும் தகவல் களஞ்சிய பணிகளை நினைவுகூர்ந்து வழங்கி வருகிறது.
இதற்கமைய, – 2023 ஆம் ஆண்டு மலையக ஆய்வாளர் மு.சி. கந்தையா (கூடலூர்) அவர்களுக்கு திருச்சி தமிழ்க்காவிரி இதழ் – தமிழகன் திருச்சிராப்பள்ளி குழுவுடன் இணைந்து கோவை மலையகம் 200 மாநாட்டிலும், – 2024 ஆம் ஆண்டு மலையக ஆவணக்காப்பாளர் வட்டகொடை சுப்பையா ராஜசேகரன் அவர்களுக்கு பதுளை மாவட்ட கலை இலக்கிய வட்டத்துடன் இணைந்து, பதாகை தெளிவத்தை தோட்ட மண்ணிலும், – 2025 ஆம் ஆண்டு ஆவணக்காப்பாளர் டீ.எஸ். டேவிட் அவர்களுக்கு எல்ல, நிவ்பர்க், குறிஞ்சிப்பேரவையுடன் இணைந்து எல்லா, நிவ்பர்க் தமிழ் மகா வித்தியாலயத்திலும் விருதுகள் வழங்கப்பட்டன.
அந்த வரிசையில் 2026 ஆம் ஆண்டிற்கான விருது இரஞ்சித் ஜெயகர் அவர்களுக்கு வத்தளையில் வழங்கப்படவுள்ளது.
முன்னதாக இவ்விழா ஹட்டனில் நடத்த திட்டமிடப்பட்ட போதும், தவிர்க்க முடியாத காரணங்களால் வத்தளைக்கு மாற்றப்பட்டுள்ளது.
2027 ஆம் ஆண்டிற்கான தெளிவத்தை ஞாபகார்த்த விருது வழங்கல் விழாவை இரத்தினபுரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் கலை, இலக்கிய செயற்பாட்டாளர்கள், பாடசாலை மாணவர்கள், நலன் விரும்பிகள், சமூக ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு விழா ஏற்பாட்டுக் குழுவினர் அன்போடு அழைப்பு விடுத்துள்ளனர்.


















