உப்புவெளி, கப்பல்துறை பகுதியில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் கடந்த நவம்பர் 2ஆம் திகதி இரவு இடம்பெற்றுள்ளது.
கப்பல்துறை சந்தியை நோக்கி வாடகை முச்சக்கரவண்டியின் பின்புறத்தில் பயணித்துக் கொண்டிருந்த இருவரை இலக்கு வைத்து, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸாரும், மாத்தறையிலுள்ள விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகளும் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
இதன்படி, நவம்பர் 6ஆம் திகதி இரவு திக்வெல்ல பகுதியில் வைத்து துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், மேலதிக விசாரணைகளுக்காக உப்புவெளி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய இரு சந்தேக நபர்களும் நவம்பர் 2ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களிடமிருந்து 32 கிராம் 800 மில்லிகிராம் கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் எனப்படும் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களிடம் பெறப்பட்ட தடுப்புக் காவல் உத்தரவுகளின் கீழ் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், குறித்த இருவருக்கும் கொலைச் சம்பவத்துடன் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் 24, 28 மற்றும் 34 வயதுடையவர்கள் என்பதுடன், அவர்கள் திக்வெல்ல மற்றும் திருகோணமலை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் பிரதான சந்தேக நபர் முன்னர் இலங்கை இராணுவத்தில் பணியாற்றியவர் என்பதுடன், பின்னர் சட்டபூர்வமாக சேவையிலிருந்து விலகியவர் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.













