லாஃப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் திடீர் விலையேற்றம் மற்றும் நாடாளுமன்ற நடைமுறைகள் தொடர்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் சபாநாயகர் மற்றும் சபை முதல்வர் இடையில் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
சமையல் எரிவாயு விலையேற்றத்தை அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகக் கருதி, நிலையியற் கட்டளை 92(2) இன் கீழ் ‘ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி உரையாற்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முற்பட்டபோதே இந்த சலசலப்பு ஆரம்பமானது.
பொதுமக்கள் சார்பாகக் குரல் கொடுப்பதற்குத் தனக்கு உரிமை உள்ளதாக அவர் இதன்போது வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த சபாநாயகர் மற்றும் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, பொருளாதார ரீதியான விலையேற்றங்களை ஒழுங்குப் பிரச்சினையாக எழுப்ப முடியாது எனத் தெரிவித்தனர்.
வாக்கெடுப்பு அல்லது சபை நடவடிக்கைகளின் போது ஏற்படும் நடைமுறைத் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதற்கு மாத்திரமே ஒழுங்குப் பிரச்சினைகள் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர, பொதுவான குறைபாடுகளை விவாதிப்பதற்கு அல்ல என சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் ஏற்கனவே பட்டியலிடப்பட்டுள்ள தனது கேள்வியை முன்வைக்குமாறு அல்லது ஆசனத்தில் அமருமாறு சபாநாயகர் எதிர்க்கட்சித் தலைவருக்குப் பலமுறை அறிவுறுத்தினார்.
எனினும், இவ்விடயத்தில் வெளிப்படைத்தன்மை அவசியம் எனவும் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் தொடர்ந்து வாதிட்டதால், சபையில் நீண்டநேரம் கடும் வாக்குவாதம் நீடித்தது.
இந்தநிலையில், லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு தொடர்பாகக் கேள்வி எழுப்புவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தமது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
நாடும் நாட்டு மக்களும் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமை கவலைக்குரிய விடயம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.















