தமிழரசுக் கட்சியின் வவுனியா நகரசபை உறுப்பினர் ரி.கே.ராஜலிங்கம், தனது பதவியை, இன்று (வெள்ளிக்கிழமை) இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், தமிழரசுக்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் வவுனியா நகர வட்டாரத்தில் நேரடியாக போட்டியிட்டு வெற்றியடைந்தேன்.
அத்துடன் வெற்றியடைந்தவர்கள் தனது பதவிக்காலத்தின் 2 வருடங்களை, மேலதிக வேட்பாளர்களாக போட்டியிட்டவர்களுக்கு வழங்க வேண்டுமென தமிழரசுகட்சி தீர்மானித்திருந்தது.
இந்நிலையில் எனது பதவிக்காலத்தின் இறுதி வருடத்தினை, ஏனையவர்களுக்கு வழங்குவதாக நான் அன்று வாக்குறுதி அளித்தேன். ஆகவே இன்னுமொருவருக்கு சந்தர்ப்பம் வழங்கும் நோக்குடன், எனது பதவியினை இராஜினாமா செய்வதற்கு தீர்மானித்துள்ளேன்.
மேலும் அது தொடர்பாக கடிதத்தினை வவுனியா தேர்தல் திணைக்களத்திற்கு இன்று உத்தியோகபூர்வமாக கையளிக்க தீர்மானித்துள்ளேன்.
இதேவேளை தேர்தல் திணைக்களத்தினால், எனது உறுப்புரிமை உத்தியோகபூர்மாக நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு கிடைக்கு வரை என்னால் முன்னெடுக்கப்பட்டு வரும் அனைத்து அபிவிருத்தி திட்டங்களையும் தொடர்ந்து முன்னெடுப்பேன்.
அத்துடன் நான் சிறந்த முறையில் பணி புரிவதற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.















